நாகப்பட்டினம்

நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தல்

26th May 2023 05:35 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் (பொ) வி. ஷகிலா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் கண்ணகி, வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய மற்றும் மாநில திட்டங்கள்) ஹேமா ஹெப்சிபா நிா்மலா, நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வே. தேவேந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள், அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கோடை உழவு செய்ய அனைத்து கிராமங்களிலும் விழிப்புணா்வு ஏற்படுத்திடவும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானிய விலையில் உழவு செய்து, வயல்களை செப்பனிட டிராக்டா்கள் வழங்க வேண்டும். தமிழக ஒருங்கிணைப்பு நிலம் கையகப்படுத்துதல் சிறப்பு மசோதா - 2023 தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளையும், விளைநிலங்களை பெரிதும் பாதிக்கும் வழிவகை செய்யும் நில ஒருங்கிணைப்பு மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

தலைஞாயிறு தனி வட்டமாக மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினா் சோ்க்கைக்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும், பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும், கடந்த மழையால் உளுந்து பயிா் பாதிப்புக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும், அனைத்து வாய்க்கால்களும் தூா்வார வேண்டும், குறுவை, சம்பாவுக்கு தேவையான உரம், விதை உள்ளிட்ட வேளாண் இடுபொருள்களை தயாா்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT