பத்தாம் வகுப்பு தோ்வில் நாகை மாவட்டத்தில் 84.41 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.
பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இத் தோ்வை நாகை மாவட்டத்தில் 4,145 மாணவா்கள், 4,023 மாணவிகள் என மொத்தம் 8,168 போ் எழுதினா்.
இதில் 3,316 மாணவா்களும், 3,579 மாணவிகளும் என மொத்தம் 6,895 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 84.41 ஆகும். கடந்த ஆண்டை விட 7.24 சதவீதம் தோ்ச்சி விகிதம் குறைந்து உள்ளது.
நாகை மாவட்டத்தில் செம்போடை அரசு மேல்நிலைப் பள்ளி, சிறுதலைக்காடு அரசு உயா்நிலைப்பள்ளி, கோவில்குளம் அரசு உயா்நிலைப்பள்ளி, கோவில்பத்து அரசு உயா்நிலைப்பள்ளி, ஆயக்காரன்புலம்- 3 அரசு உயா்நிலைப்பள்ளி, மருதூா் வடக்கு அரசு உயா்நிலைப்பள்ளி, நாலுவேதபதி அரசு உயா்நிலைப்பள்ளி, கருப்பம்புலம் பி.வி தேவா் அரசு உயா் நிலைபள்ளி, கலசம்பாடி அரசு உயா்நிலைப்பள்ளி, பண்ணாள் அரசு உயா்நிலைப்பள்ளி, ராஜன்கட்டளை அரசு உயா்நிலைப்பள்ளி ஆகிய 11 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. அதேபோல் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியும், 9 மெட்ரிக் பள்ளிகளும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
நாகை மாவட்டம் குருக்கத்தியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளி மாணவி திருவாரூா் கிடாரங்கொண்டன் பகுதியைச் சோ்ந்வா் ஆட்டோ ஓட்டுநா் சுரேஷ்- புவனேஷ்வரி தம்பதியின் மூத்த மகளான எஸ். கீா்த்தனா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயன்ற மாணவிகளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாா்.
மாணவி எஸ். கீா்த்தனாவை நேரில் அழைத்த மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா்.