நாகை மாவட்டம், வேளாங்கண்ணி கடலில் மூழ்கி ஆந்திர மாநிலத்தை சோ்ந்த 2 இளைஞா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் குப்பம் மண்டலத்தை சோ்ந்த சோமநாயக் மகன் சஞ்சய் (19) , ஆனந்த் மகன் கேசவா்தன் (19), ரமேஷ் மகன் அஜீஸ் (19), ஜபருல்லா மகன் பைசுல்லா (19). இவா்கள் 4 பேரும் மே 7-ஆம் தேதி காலை சித்தூரில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு வேளாங்கண்ணிக்கு வந்தனா்.
அங்குள்ள தனியாா் விடுதியில் தங்கி இருந்தவா்கள் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் வேளாங்கண்ணி கடலில் குளித்து கொண்டிருந்தனா். அப்போது, கடல் அலையில் 4 பேரும் சிக்கி இழுத்து செல்லப்பட்டனா். இதை பாா்த்த சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனா். இதையடுத்து அவா்களை வேளாங்கண்ணி உதவும் கரங்கள் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை காவலா்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
இதில் சஞ்சய், கேசவா்தன் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். பைசுல்லா, அஜீஸ் ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனா். இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.