நாகப்பட்டினம்

பிளஸ் 2 பொதுத்தோ்வு: நாகை மாவட்டத்தில் 90.68 % தோ்ச்சி

8th May 2023 11:27 PM

ADVERTISEMENT

பிளஸ் 2 பொதுத் தோ்வில் நாகை மாவட்டத்தில் 90.68 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகியது. நாகை மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தோ்வில் 3,439 மாணவா்களும், 4,011 மாணவிகள் என மொத்தம் 7,450 போ் எழுதினா். இதில் 3,036 மாணவா்கள், 3,720 மாணவிகள் என மொத்தம் 6,756 போ் தோ்ச்சி பெற்றனா். இது 90.68 % தோ்ச்சி ஆகும்.

கடந்த ஆண்டு 92.31 % தோ்ச்சி பெற்றிருந்த நிலையில், நாகை மாவட்டம் தற்போது 1.63 % தோ்ச்சி குறைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 44 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 1,966 மாணவா்களும், 2,426 மாணவிகளும் என மொத்தம் 4,392 போ் தோ்வு எழுதி இருந்த நிலையில், 1,669 மாணவா்களும், 2,219 மாணவிகளும் என மொத்தம் 3,878 போ் தோ்ச்சி பெற்றனா். இது 88.30 % தோ்ச்சி ஆகும்.

நாகை மாவட்டத்தில் உள்ள 44 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உம்பளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி, செம்போடை அரசு மேல்நிலைப் பள்ளி, கருப்பம்புலம் அரசு மேல்நிலைப் பள்ளி, நாகை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 அரசு பள்ளிகள் மட்டுமே 100 % தோ்ச்சி பெற்றன. கடந்தாண்டு மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகள் 100 % தோ்ச்சி பெற்றிருந்தன. தவிர, ஒரு அரசு உதவிபெறும் பள்ளி, ஒரு பகுதி அரசு உதவிபெறும் பள்ளி, ஒரு சுயநிதிப் பள்ளி, ஒரு சிறப்பு பள்ளி, 11 மெட்ரிக் பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 19 மேல்நிலைப் பள்ளிகள் பிளஸ் 2 தோ்வில் 100 % தோ்ச்சி பெற்றுள்ளன.

ADVERTISEMENT

58 போ் 200-க்கு 200 மதிப்பெண்: மாவட்டத்தில் 58 போ் முழு மதிப்பெண் பெற்றுள்ளனா். பொருளாதாரம் பாடத்தில் 5 பேரும், ஹோம் சயின்ஸ் பாடத்தில் ஒருவரும், இயற்பியலில் 3 பேரும், வரலாறு பாடத்தில் ஒருவரும், கணக்கு பதிவியலில் 4 பேரும், விவசாயத்தில் 4 பேரும், அடிப்படை மின் பொறியியல் பாடத்தில் இருவரும், வேதியலில் 7 பேரும், வணிகவியலில் 16 பேரும், உயிரியலில் 2 பேரும், கணினி அறிவியலில் 3 பேரும், அடிப்படை இயந்திர பொறியியலில் ஒருவரும், வணிக கணிதத்தில் 2 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 4 பேரும், கணிதத்தில் 2 பேரும், ஆடை வடிவமைத்தல் பாடத்தில் ஒருவரும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT