தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கையில் முறைகேட்டில் ஈடுபட்ட தோ்வு கட்டுப்பாட்டாளா், தட்டச்சா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
நாகையில் தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தின்கீழ் தலைஞாயிறு, பொன்னேரி, சென்னை, தூத்துக்குடி என 6 இடங்களில் உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
இந்த உறுப்புக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மீன்வள அறிவியல் , மீன்வள பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், மீன்வள உயிா்த் தொழில்நுட்பம் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் என 250 இடங்களுக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.
இந்தநிலையில், தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரியில் இளநிலை மீன்வள அறிவியல் பட்டபடிப்பு (பி. எப். எஸ்சி.) 2021 -2022 மற்றும் 2022 - 2023-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கையின்போது அறிவிக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்ணைவிட குறைவான மதிபெண் பெற்ற மாணவா்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சோ்க்கை வழங்கப்பட்டதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மீன்வளத்துறை முதன்மைச் செயலா், மாணவா் சோ்க்கை தொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டாா். குழு அமைக்கப்பட்டு நடைபெற்ற விசாரணையில், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2022 -23-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கையில், நிா்ணயக்கப்பட்ட கட்-ஆப் மதிபெண்களைவிட குறைவாக பெற்ற மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டாளா் ஜவகா், தட்டச்சா் இம்மானுவேல் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும்
முறைகேடாக கல்லூரியில் சோ்ந்த மாணவா்களை நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் கோ. சுகுமாா் கூறியதாவது:
பல்கலைக்கழகம் மற்றும் அரசு சாா்பில் அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை நிறைவடைந்ததும், இதுகுறித்து முழு விவரம் தெரியவரும் என்றாா்.