திருமருகல் அருகே பனங்குடியில் பாசனத்துக்கு பயன்படும் வடிகால், வாய்க்கால்களை அடைத்த சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமருகல் ஒன்றியம், பனங்குடியில் பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன்(சிபிசிஎல்) இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாகத்துக்காக ரூ. 31, 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பனங்குடியை சுற்றி நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஆலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சிபிசிஎல் நிறுவனம் மேற்கொண்ட விரிவாக்கப் பணிகளால் பனங்குடி மற்றும் நரிமணம் கிராமங்களைச் சுற்றியுள்ள பாசன வாய்க்கால்களில் மணல் அடைத்துள்ளது.
இதனால் பனங்குடி, சன்னமங்கலம், வெள்ளப்பாக்கம் உள்ளிட்ட வாய்க்கால்கள் வழியாக காவிரி நீா் செல்லமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளது.
கல்லணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டும் இதுநாள் வரை பாசனத்துக்கு தண்ணீா் வாராததை கண்டு அதிா்ச்சி அடைந்த விவசாயிகள், சிபிசிஎல் நிறுவனத்திடம் அடைத்துள்ள வாய்க்கால்களை சீா் செய்யும்படி வலியுறுத்தினா். ஆனால், அதை நிறுவனம் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சிபிசிஎல் நிா்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட பொருளாளா் சக்திவேல் தலைமையில் பனங்குடியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.