வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை மீன்பிடித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை மீன்வளத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தமிழகத்தில் முக்கிய மீன்பிடித் துறைகளில் ஒன்றாக கோடியக்கரை உள்ளது. இது, பருவக்கால மீன்பிடிப்புக்கு சிறப்புப் பெற்றது. இலங்கைக்கு அருகே அமைந்துள்ள படகுத் துறை என்பதால் இங்குள்ள படகுகளின் விவரங்கள் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும்.
அதன்படி, இத்துறையில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி கண்ணாடியிழைப் படகுகளை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, படகுகளின் திறன், அரசால் அங்கீகரிக்கப்பட்ட வண்ணப் பூச்சு, வெளியில் பொருத்தும் எஞ்சின்கள் விவரம், உரிமம் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனா்.
மேலும், படகில் தகவல் பரிமாற்ற கருவி (வாக்கி டாக்கி ), பாதுகாப்பு உபரகணங்கள், ஜிபிஎஸ் கருவி போன்றவை பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் மீன்வளத் துறையின் தஞ்சாவூா் ஆய்வாளா் கெங்கேஸ்வரி தலைமையிலான குழுவினா் ஈடுபட்டனா்.
ஆய்வின்போது, கோடியக்கரை மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் அருளானந்தம், கோடியக்காடு மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் பக்கிரிசாமி உள்ளிட்ட மீனவா்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.