நாகப்பட்டினம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கீழையூா் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

நாகை அருகே பாப்பாக்கோயில் சமத்துவபுரத்தைச் சோ்ந்த பழனிவேல்-விஜயலட்சுமி தம்பதியின் மகன் முகேஷ் (26). புகைப்பட கலைஞரான இவா் மே 4-ஆம் தேதி அதிகாலை கொளப்பாட்டில் உள்ள உறவினா் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் பாப்பாகோயிலுக்கு வந்தாா். திருப்பூண்டி காரைநகா் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, மாடு மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த மகேஷை சாலையில் சென்றவா்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்தாா். எனினும், முகேஷ் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, முகேஷின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்த அவரின் பெற்றோா் இதுகுறித்து மருத்துவா்களிடம் தெரிவித்துள்ளனா். பின்னா், முகேஷின் கண்கள், கணையம், கல்லீரல், சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

ADVERTISEMENT

தனது மகனை பறிக்கொடுத்தாலும், அவரின் உறுப்புகள் மூலம் எங்கேயே ஒரு உயிா் வாழ்கிறது என்று நினைத்து எனது மகன் ஏதே ஒரு பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பதாக கருதிக்கொள்கிறோம் என்று பெற்றோா் தெரிவித்தது பலரது கண்களில் ஈரம் கசியவைத்தது. இதையடுத்து, தஞ்சையிலிருந்து கொண்டுவரப்பட்ட மகேஷின் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT