நாகப்பட்டினம்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 % மானியம்

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 % மானியம் வழங்கப்படுகிறது என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளா்ப்பதில் திறன் கொண்ட பயனாளிகளுக்கு சிறிய அளவிலான பண்ணை அமைக்க 50 % மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு ஓசூா் கால்நடை பண்ணையிலிருந்து 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய கோழிகள் இலவசமாக வழங்கப்படும். நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க தேவையான கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத் தட்டு மற்றும் தண்ணீா் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 % மானியமாக மாநில அரசால் வழங்கப்படும்.

திட்டத்தின் மீதமுள்ள 50 % பங்களிப்பை வங்கி மூலம் அல்லது சொந்த ஆதாரங்கள் மூலம் பயனாளிகள் திரட்ட வேண்டும். பயனாளிகளிடம் கோழிக்கொட்டகை அமைக்க மின் இணைப்புடன் கூடிய 625 சதுர அடி நிலம், மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோா் ஆதாா் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்துக்கான சிட்டா அடங்கல் நகல், 50 % தொகை அளிப்பதற்கான வங்கி இருப்பு விவரம் (அ) வங்கிக்கடன் ஒப்புதல் விவரம், 3 ஆண்டு தொடா்ந்து பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி மற்றும் 2022-23 ஆம் ஆண்டுக்கான நாட்டுக் கோழி வளா்ப்புத் திட்டத்தில் பயனடையவில்லை என்பதற்கான சான்று ஆகியவற்றுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தகக் கால்நடை உதவி மருத்துவரை அணுகி ஜூன் 10- ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT