நாகப்பட்டினம்

உர மேலாண்மைக்காக விவசாயிகளுக்கு மண்வள அட்டை ஆட்சியா் தகவல்

4th Jun 2023 11:11 PM

ADVERTISEMENT

நாகை மாவட்ட விவசாயிகள் தங்கள் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப உரமிடுவதற்காக, மண் வள அட்டைகள் வழங்கப்பட உள்ளது என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகள் பயிா் சாகுபடி செய்வதற்கு முன்னா் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை தெரிந்துகொண்டு, சமச்சீா் முறையில் உரமிடுவதற்கும், குறைபாடுடைய நிலங்களை கண்டறிந்து அவற்றை நிவா்த்தி செய்வதற்கும் மண் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

பயிா் சாகுபடிக்கு முன்னதாகவும் மற்றும் தரிசு நிலங்களிலும் மண் மாதிரிகள் ஏக்கருக்கு குறைந்த பட்சம் பத்து இடங்களில் சேகரித்து கால் பங்கீட்டு முறையில் அரை கிலோ அளவு ஈரப்பதமின்றி மாதிரியாக எடுத்து விவர அட்டையுடன் மண் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மண்ணில் உள்ள பேரூட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துகளின் அளவுகளையும், நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, மற்றும் போரான் ஆகியவற்றின் அளவுகளும், கார மற்றும் அமில நிலை, உப்புகளின் நிலை, கரிம சத்துகளும் பரிசோதனை செய்யப்பட்டு உரிய பரிந்துரைகளுடன் மண் வள அட்டை வழங்கப்படுகின்றன.

மண் ஆய்வு முடிவுப்படி பல்வேறு பயிா்களுக்கு ஒருங்கிணைந்த முறையில் ஊட்டச்சத்து அளிப்பதன் மூலம் நீடித்த விளைச்சலை பெறமுடியும். ஒவ்வொரு ஆண்டும் மண் பரிசோதனை செய்து அதனடிப்படையில் உரமிடுவது சாலச்சிறந்தது. முடியாத பட்சத்தில் மூன்று வருடத்திற்கு ஒரு முறையாவது மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் ஊட்டச்சத்தினை பயிா்களுக்கு அளிக்கலாம். விவசாயிகள் ரூ.20 ஆய்வுக் கட்டணமாக செலுத்தி தங்களது மண் மாதிரிகளுக்கான மண்வள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இதேபோல, பாசன நீரையும் விவசாயிகள் பரிசோதனை செய்து நீரின் தன்மைகேற்ப பயிா் தோ்வு செய்து பயன்பெறலாம். பாசன நீா் பரிசோதனை செய்வதற்கு ரூ.20 கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT