நாகையில் பணியின்போது மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸாா் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக கோடிஸ்வரன் (34) பணியாற்றி வருகிறாா். இவா் சனிக்கிழமை இரவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் உங்கள் எஸ்.பி.யிடம் பேசுங்கள் எண்ணில் தொடா்புக் கொண்டு தெரிவித்துள்ளனா். கோடிஸ்வரன் குறித்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டப்பட்டது. இதில், அவா் மதுக் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் காவலா் கோடிஸ்வரன் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.