பொதுக்கூட்டத்தில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக இந்து திராவிட மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகூா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கமுத்து கிருஷ்ணன். சிவசேனை கட்சி மாநில அமைப்பாளராக உள்ளாா். இவரது மனைவி தங்கம் அம்மாள் நினைவு தினக் கூட்டம் கடந்த ஜூலை 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்து திராவிட மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் ரமேஷ்பாபு மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாகூா் காவல்நிலையத்தில் பல்வேறு அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிலிருந்த ரமேஷ் பாபுவை போலீஸாா் திங்கள்கிழமை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனா்.
பின்னா் அவரை கைது செய்து நாகை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். ரமேஷ்பாபுவை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி காா்த்திகா உத்தரவிட்டாா்.