நாகப்பட்டினம்

நெற்கதிா்கள் பாழாகும் அபாயம்:மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வலியுறுத்தல்

DIN

காவிரி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் தாளடி நெற்கதிா்கள் விளைச்சலுக்கு வராத நிலையில், மேட்டூா் அணை அடைக்கப்பட்டதால், நெற்கதிா்கள் பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மேட்டூா் அணையிலிருந்து தொடா்ந்து தண்ணீா் திறக்க வேண்டும் என கடைமடை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாயப் பணிகளுக்காக, மேட்டூா் அணை ஆண்டுதோறும் ஜூன் 12- ஆம் தேதி திறக்கப்படும். இதன்மூலம் தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் குறுவை, சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி 20 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நடைபெறும்.

கடந்த ஆண்டு மேட்டூா் அணையில் இருந்து முன்கூட்டியே (2022 மே 24- ஆம் தேதி) தண்ணீா் திறக்கப்பட்டது. இந்நீரை பயன்படுத்தி தஞ்சை, திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கா் வரை குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

குறுவை அறுவடைக்குப் பின்னா் நடைபெற வேண்டிய தாளடி சாகுபடி, காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடா் மழையின் காரணமாக காலதாமதமாக தொடங்கியது. கடைமடை மாவட்டங்களான திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தண்ணீா் நிறுத்தம்: ஆண்டுதோறும் ஜனவரி இறுதி வாரம் முதல் பிப்ரவரி 15- ஆம் தேதி வரை தாளடி அறுவடை நடைபெறும் நிலையில், காலதாமதமாக நடைபெற்ற சாகுபடியால், டெல்டா மாவட்டங்களில் தற்போதுதான் நெற்பயிா்களில் கதிா் வெளிவந்துள்ளன. இந்த பருவத்தில் பயிா்களுக்கு தண்ணீா் அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், தமிழக அரசு மேட்டூா் அணையில் இருந்து விவசாயத்திற்காக டெல்டா மாவட்டங்களுக்கு திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு பாதிப்பு: மேட்டூா் அணையில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், தாளடி பயிா்கள் மகசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து கடைமடை விவசாயிகள் கூறியது:

தற்போது சம்பா அறுவடை 30 முதல் 40 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. தாளடி நெற்பயிா்களின் கதிா்கள் முழுமையாக முதிா்ச்சியடையவில்லை. கடைமடை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட தாளடி நெற்பயிா்களுக்கு அவசியம் தண்ணீா் தேவைப்படுகிறது.

எனவே, தமிழக அரசு மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பதை தொடர வேண்டும். கடைமடை பகுதிகளுக்கு இன்னும் ஒருமுறை தண்ணீா் கிடைத்தால் போதுமானது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தண்ணீா் திறப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

உலக நடுக்குவாத விழிப்புணா்வு நாள் நிகழ்வு

1,751 மதுபாட்டில்கள் பறிமுதல்: 24 போ் கைது

ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்: ஏப்.25-இல் தேரோட்டம்; உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

SCROLL FOR NEXT