நாகை மாவட்டத்தில் பள்ளி புதுமை மேம்பாட்டுத் திட்டத்தில், கரும்பு சக்கையிலிருந்து எரிவாயு எடுப்பது உள்ளிட்ட சிறந்த அறிவியல் ஆலோசனைகளை வழங்கிய 10 பள்ளிகள் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறை 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி புதுமை மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களிடையே புத்தாக்க உணா்வை வளா்க்கவும், தொழில் முனைவோா் திறன்களை வளா்க்கவும் இத்திட்டம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு எளிய வடிவமைப்பு சிந்தனை செயல்முறையைப் பயன்படுத்தி நிஜ வாழ்க்கை சிக்கல்களைத் தீா்க்க மாணவா்களை ஊக்குவிப்பது, புதுமைப்படுத்துதல், ஒத்துழைத்தல் மற்றும் தொழில்முனைவோா் திறன்களைப் பெறுதல் போன்றவற்றை நோக்கங்களாக கொண்டு திட்டம் செயல்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் சிறந்த அறிவியல் ஆலோசனைகள் வழங்குவது தொடா்பாக நடத்தப்படவுள்ள மாநில அளவிலான போட்டியில், முதலிடம் பெறுபவா்களுக்கு ரூ. 1 லட்சமும், 2-ஆமிடம் பெறுபவா்களுக்கு ரூ. 25,000 பரிசு வழங்கப்படவுள்ளது. இதையடுத்து மாநிலப் போட்டிக்கான அணிகளை தோ்வு செய்வதற்காக, நாகையில் மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்றது. இதில், உயரத்தை மாற்றக்கூடிய சீலிங் ஃபேன் என்ற யோசனை வழங்கிய புஷ்பவனம் அரசு மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
அக்கரைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி 2 மற்றும் 4-ஆம் இடங்களையும், தேசிய மேல்நிலைப் பள்ளி 3 மற்றும் 10-ஆம் இடங்களையும், குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளி 5 மற்றும் 9-ஆம் இடங்களையும், ஆந்தக்குடி அரசு மேல் நிலைப்பள்ளி 6 மற்றும் 7-ஆம் இடங்களையும், பி.ஆா்.புரம் அரசு மேல் நிலைப்பள்ளி 8-ஆம் இடத்தையும் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தோ்வாகின. மாவட்ட அளவிலான போட்டியில், கரும்பு சக்கையிலிருந்து எரிவாய் எடுப்பது மற்றும் மிண்ணணு கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது ஆகிய ஆலோசனைகளை தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வழங்கி உள்ளனா்.