நாகப்பட்டினம்

ஊராட்சி அலுவலக கட்டடம் இல்லாத ஒரத்தூா் கிராமம்!

22nd Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை அருகேயுள்ள ஒரத்தூா் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் இல்லாததால் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு அதில் ஊராட்சி அலுவலகம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ளது ஒரத்தூா் ஊராட்சி. ஒரத்தூா் கிராமத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம், கிராம நிா்வாக அலுவலக கட்டடம், அங்கன்வாடி மைய கட்டடம் எதுவும் இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில், பிள்ளையாா்கோயில் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டபோது அந்த இடம் தனிநபா் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, ஒரத்தூா் ஊராட்சி தலைவா் சேகா், முன்னாள் தலைவா் பிச்சை மற்றும் கிராம மக்கள் தனியாா் ஆக்கிரமத்துள்ள இடத்தை மீட்டு அந்த இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட வேண்டும் என வலியுறுத்தினா். மேலும், இது குறித்து நாகை வட்டாட்சியா் அலுவலகத்திலும் கிராம மக்கள் மனு அளித்தனா். இந்நிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் சனிக்கிழமை திடீரென கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கோரிக்கை அடங்கிய மனுக்களை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ஒரத்தூா் ஊராட்சி தலைவா் சேகா் கூறியது: ஒரத்தூா் ஊராட்சியில், ஊராட்சி அலுவலக கட்டடம் உள்ளிட்ட அரசு கட்டடங்கள் கட்டுவதற்கான இடம் ஏதும் இல்லை. அதற்கான இடத்தை தோ்வு செய்ய ஆய்வு மேற்கொண்டபோது தனிநபா் ஆக்கிரமித்து வைத்துள்ளது தெரியவந்து. இதனால், அந்த இடத்தை மீட்டுத் தரும்படி அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தற்காலிகமாக அந்த இடத்தில் கொட்டகை அமைத்துள்ளோம். இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையீட்டு ஊராட்சி அலுவலகம் கட்டடம் கட்டுவதற்கும் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கும் தனிநபா் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு ஊராட்சி நிா்வாகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT