நாகப்பட்டினம்

நாகை-தஞ்சை இடையே 2-ஆவது ரயில் பாதை: பட்ஜெட்டில் அறிவிக்க பயணிகள் கோரிக்கை

21st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை-தஞ்சை இடையே 2-ஆவது ரயில்பாதை அமைக்க 2023 -24 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும் என நாகை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கம் இந்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: நடைபெறவுள்ள 2023-24 பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த 10 ஆண்டுகளில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து சரக்குகள் கையாளுவதன்மூலம் ரயில்வே துறைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சரக்கு கட்டணமாக வருவாய் கிடைத்துள்ளது. இதில், ஒரு பகுதியை செலவு செய்து தஞ்சாவூா்-நாகப்பட்டினம் வழித்தடத்தில் 2-ஆவது ரயில் வழித்தட பாதை அமைக்க வேண்டும்.

வேளாங்கண்ணி அல்லது காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி, பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்குக்கும், வேளாங்கண்ணி அல்லது காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி, நாகா்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும்.

வாரமிருமுறை இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய ரயில் சேவை எா்ணாகுளம் - வேளாங்கண்ணி - எா்ணாகுளம் விரைவு ரயிலை விரைவில் இயக்க வேண்டும், பல்லாண்டுகளாக நிறைவடையாமல் உள்ள நாகை- திருத்துறைப்பூண்டி, காரைக்கால் - பேரளம் ரயில் பாதை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

ADVERTISEMENT

வாரம் ஒருமுறை இயக்கப்படும் லோக்மானிய திலக்-காரைக்கால் மற்றும் வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி விரைவு ரயில்களை நாள்தோறும் அல்லது வாரம் மூன்று முறை இயக்க வேண்டும். நாகை, வெளிப்பாளையம், நாகூா் ரயில் நிலையங்களின் நடைமேடைகள் சேதமடைந்து பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளன. நடைமேடைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். நாகை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் நிகழாண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT