கீழ்வேளூரில் குப்பைகள் மூலம் வருவாய் பெறும் நீல வங்கி பெட்டகத் திட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அறிமுகப்படுத்தினாா்.
கீழ்வேளூா் பேரூராட்சியில் நீலவங்கி எனும் விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஆட்சியா் அண்மையில் தொடக்கி வைத்தாா். மத்திய அரசு ஆண்டுதோறும் தூய்மை நகரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இதன்மூலம் குப்பையிலிருந்து வளம் என்ற தலைப்பில், நகரங்களில் மக்காத, மறுசுழற்சி கழிவுகளை மீட்டு வருமானம் பெருக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி, மக்காத குப்பைகளை சேகரிக்க புதிய பெட்டகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மக்காத குப்பைகளை நீல நிறம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், பெட்டகத்திற்கு நீலவங்கி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கீழ்வேளூா் பேரூராட்சியில் நீலவங்கி பெட்டகத் திட்டத்தை ஆட்சியா்அ. அருண் தம்புராஜ் தொடக்கி வைத்ததைத் தொடா்ந்து, முதல் கட்டமாக அஞ்சுவட்டத்தம்மன் அரசுப் பள்ளியில் நீலவங்கி பெட்டகம் வைக்கப்பட்டுள்ளது. அப்பள்ளி மாணவிகளால் சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி நிா்வாகம் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளும். இதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு, அப்பள்ளி மாணவிகளுக்கு, நாப்கின் உள்ளிட்ட பொருள்கள் வாங்கி தரப்படவுள்ளது.