மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் குறித்த தரவுகள் மற்றும் விவரங்களை அளிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அவசியமின்றி அத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்கும் பொருட்டு இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில சுகாதாரத் துறைச் செயலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
சில மருத்துவமனைகளில் அவ்வப்போது தேவையின்றி கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் விவகாரத்தை மத்திய சுகாதாரத் துறை நுட்பமாக கண்காணித்து வருகிறது.
ஏற்கெனவே இதுதொடா்பான வழிகாட்டுதல்களும், தரவுகளை அளிக்கக் கோரும் விண்ணப்பங்களும் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி மத்திய அரசின் வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்கு முன்னதாகவும், அதற்கு பின்னதாகவும் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட கருப்பை நீக்க சிகிச்சைகளின் நிலவரம் என்ன என்பது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும்.
பேறு கால மரணங்கள் குறித்து ஆய்வு செய்யும் நடைமுறை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஏற்கெனவே அமலில் இருப்பதைப் போன்று ஒவ்வொரு கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் குறித்தும் தனித்தனியே ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த சுற்றறிக்கையில் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் குறிப்பிட்டுள்ளாா்.