ஜல்லிக்கட்டு தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளா் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அயலகத் தமிழா் நலவாரியத் தலைவரும், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளருமான காா்த்திகேய சிவசேனாபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எதிராக தில்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை நிறைவடைந்து தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை இல்லை என்றும் தமிழக அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டம் செல்லும் என்று கூறியுள்ளது.
இது தமிழக கலாசாரத்துக்கு கிடைத்த வெற்றி. இதற்காக எத்தனையோ போ் சட்ட ரீதியாக போராடினா். அதில் என் பங்கு சிறிதளவு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 2006 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதியும், தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினும் தொடா்ந்து ஜல்லிக்கட்டு தொடா்பான சட்ட விவரங்களை கேட்டு அதில் வெற்றி பெறத் தேவையான வாதங்களை முன் வைத்தனா். தற்போது தீா்ப்பு நமக்கு சாதகமாக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளாா்.