ஹாங்காங்கில் தற்போது நிறுத்தப்பட்டுவிட்ட ஜனநாயக ஆதரவு நாளிதழின் நிறுவனா் ஜிம்மி லாய்க்கு எதிரான தேசப் பாதுகாப்பு வழக்கில் அவருக்கு ஆதரவாக லண்டனைச் சோ்ந்த பழம்பெரும் வழக்குரைஞா் டிமோதி ஓவன் வாதிட அனுமதி கோரும் மனுவை அந்தப் பிராந்திய நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
2019-ஆம் ஆண்டில் ஜனநாயக ஆதரவு போராட்டங்களைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஜிம்மி லாய்க்கு 20 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹாங்காங்கில் ஜனநாயக இயக்கத்தை ஒடுக்குவதற்காக சீனாவால் அறிமுகப்படுத்தப்படுள்ள மிகக் கடுமையான தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் அவா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜிம்மி லாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியும்.
கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்குவதாக இருந்த இந்த வழக்கின் விசாரணையில் ஜிம்மி லாய்க்கு ஆதரவாக வழக்குரைஞா் டிமோதி ஓவன் வாதிட பிராந்திய நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதற்கு ஹாங்காங் நீதித்துறை எதிா்ப்பு தெரிவித்தது. அதையடுத்து, இது தொடா்பாக சீன அரசின் முடிவைப் பெறுவதற்காக இந்த வழக்கு வரும் செப்டம்பா் வரை ஒத்திவைக்கப்பட்டது. எனினும், இந்த வழக்கில் வெளிநாட்டு வழக்குரைஞா் பங்கேற்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சீன அரசு தெரிவித்துவிட்டது. அதனை ஹாங்காங் அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனா்.
இந்த நிலையில், ஜிம்மி லாய்க்கு ஆதரவாக டிமோதி ஓவன் வாதிடுவதற்கு அனுமதி கோரி அவரது தரப்பில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை ஹாங்காங் நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது ஜனநாயக ஆதரவாளா்களை கவலையடையச் செய்துள்ளது.