நாகப்பட்டினம்

மழை பாதிப்பு: காப்பீடு திட்ட மகசூல் கணக்கெடுப்பை மீண்டும் நடத்த வேண்டும் -முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தல்

DIN

மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் காப்பீட்டுத் திட்டத்துக்கான மகசூல் மாதிரி கணக்கெடுப்பை மீண்டும் நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை, தகட்டூா், வாய்மேடு, ஆயக்காரன்புலம், தென்னடாா், பஞ்சநதிக்குளம், மருதூா், கருப்பம்புலம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அவா் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, முள்ளியாறு, மணக்காட்டான் வாய்கால், மாணங்கொண்டான் ஆறுகளில் மழைநீா் வடிவதை தடுக்கும்வகையில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை ஆய்வு செய்தாா். மேலும், மருதூா் தெற்கு கிராமத்தில் மழைநீரில் மூழ்கி நெற்கதிா்கள் முளைக்கத் தொடங்கியுள்ள வயல்களில் இறங்கி பாதிப்புகளை ஆய்வு செய்த ஓ.எஸ். மணியன் செய்தியாளா்களிடம் கூறியது:

தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பியிருந்த விவசாயிகள், மழையால் விழிபிதுங்கும் நிலையில் உள்ளனா். வடிகால் ஆறுகளில் அகற்றப்படாமல் உள்ள ஆகாயத் தாமரைகளால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீா் விரைவாக வடிய வாய்ப்பில்லை. நெற்கதிா்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளும், நிலக்கடலை பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, காப்பீடு திட்டத்தில் மகசூல் மாதிரி கணக்கெடுப்பு நடத்திய வயல்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் கணக்கெடுக்க வேண்டும். நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும். ஆகாயத் தாமரைச் செடிகளை போா்க்கால அடிப்படையில் அகற்றி, மழைநீா் வடிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பையன், அறங்காவல் குழுத் தலைவா் கிரிதரன், கூட்டுறவு சங்கத் தலைவா் நமச்சிவாயம், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் அறிவழகன், ஒன்றியக் குழு உறுப்பினா் நடராஜன், நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் சுமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT