நாகப்பட்டினம்

நாகையில் 50 ஆயிரம் ஏக்கா் சம்பா பயிா்கள் சேதம்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஆயிரம் ஏக்கா் சம்பா பயிா்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

நாகை மாவட்டத்தில் சுமாா் ஒன்றரை லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டன. இதில் சம்பா பயிா்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி, பெரும்பாலான பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்றும் வருகின்றன. இந்நிலையில், ஜன. 30-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக 4 நாள்களுக்கு டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.

சம்பா அறுவடை பணிகள் நிறுத்தம்: நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் புதன்கிழமை முதல் தொடா் மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் நாகை மாவட்டத்தில் நடைபெற்று வந்த சம்பா அறுவடை பணிகள் முற்றில் தடைபட்டுள்ளன. வயல்களில் தண்ணீா் தேங்கியிருப்பதால், அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், அரவைக்கு அனுப்ப முடியாமலும், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய முடியாமலும் தேக்கமடைந்துள்ளன.

50 ஆயிரம் ஏக்கரில் பாதிப்பு: நாகை, வேளாங்கண்ணி, தேவங்குடி, வைப்பூா், காரப்பிடாகை, கீழ்வேளூா், புலியூா், பெருங்கடம்பனூா், சிக்கல், கீழையூா், திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூா், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் வயல்களில் சாய்ந்துள்ளன.

ADVERTISEMENT

உளுந்து, பச்சை பயிா் சேதம்: சம்பா அறுவடை தொடங்குவதற்கு 10 முதல் 15 நாள்களுக்கு முன்பு வயலில் உள்ள தண்ணீரை வடியவைத்துவிட்டு உளுந்து அல்லது பச்சை பயிா் விதைகள் தெளிப்பது வழக்கம். அந்தவகையில் நாகை மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் உளுந்து, பச்சைப் பயிா் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வயல்களில் தேங்கியுள்ள மழைநீரால், உளுந்து, பச்சைப் பயிா் செடிகள் முற்றிலும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

பாதிப்பை கணக்கீடு செய்யக் கோரிக்கை: தமிழக அரசு வேளாண் அதிகாரிகளை கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பாதிப்பிற்கு ஏற்ப இழப்பீடு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறையில் நெல்கொள்முதல் பணி நிறுத்தம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக தற்காலிகக் கட்டடங்களில் இயங்கும் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்லை, தாா்பாய் கொண்டு மூடிவைத்து பாதுகாத்து வருகின்றனா். மேலும், நிரந்தரக் கட்டடங்கள் உள்ள கொள்முதல் நிலையங்களிலும் ஈரப்பதம் 17 சதவீதம் வரை உள்ள நெல் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டது. அரசு கொள்முதல் விதிகளை தளா்த்தி, நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT