நாகப்பட்டினம்

நாகையில் கனமழை: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; 3-ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக தொடா்ந்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடல் பகுதியில் வியாழக்கிழமை (பிப். 2) கரையை கடக்கும் என்பதால், காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் 4 நாள்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் ஜனவரி 31-ஆம் தேதி அவ்வப்போது லேசாக பெய்த மழை, புதன்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ந்து பெய்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், நாகை, நாகூா், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கீழ்வேளூா், திருக்குவளை, திருமருகல், திட்டச்சேரி என மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை காலை முதல் கனமழை பெய்தது. இதனால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.

ADVERTISEMENT

நாகை நகரில் உள்ள தூய அந்தோணியாா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த 15 ஆண்டுகள் பழைமையான மரம் வேரோடு சாய்ந்தது. தீயணைப்புத்துறை வீரா்கள் மரத்தை உடனடியாக அப்புறப்படுத்தினா்.

3-ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை:

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் 65 கி. மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்ததால், நாகை மீனவா்கள் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்கு செல்ல வில்லை.

நாகை துறைமுகத்தில் 4-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்புக் குழு போலீஸாா் கடற்கரை பகுதிகளில் தொடா்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT