நாகப்பட்டினம்

நாகையில் தொடர் மழை: 20,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் சேதம்!

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

நாகை மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் சம்பா பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி, பெரும்பாலான பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜனவரி 30 வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4 நாள்களுக்கு காவிரி டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக பிப்.1 ஆம் தேதி வலுப்பெற்றது. தாழ்வு மண்டலத்தின் தீவிரத்தையடுத்து நாகை துறைமுகத்தில் வியாழக்கிழமை 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் புதன்கிழமை தொடங்கி விடிய, விடிய  வியாழக்கிழமையும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

சம்பா அறுவடை பணிகள் பாதிப்பு

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் புதன்கிழமை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் நாகை மாவட்டத்தில் நடைபெற்று வந்த சம்பா அறுவடை பணிகள் முற்றில் தடைபட்டுள்ளது. வயல்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால், அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், அரவைக்கு அனுப்ப முடியாமலும், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய முடியாமலும் தேக்கமடைந்துள்ளன.

நாகை, வேளாங்கண்ணி, தேவங்குடி, வைப்பூர், காரப்பிடாகை, கீழ்வேளூர் , புலியூர், பெருங்கடம்பனூர்,சிக்கல், கீழையூர், திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூர், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்துள்ளன.

இதேபோன்று தாளடி வயல்களில் தேங்கிய தண்ணீரால் கதிர் வந்துள்ள நெற்பயிர்கள் வயலில் சாயத் தொடங்கியுள்ளன. இந்த தொடர் பாதிப்பால் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால், வேளாண் அதிகாரிகள் மழைக்கு பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்கள் 2 ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வங்கக் கடலில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடம் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 27 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT