நாகை, காரைக்கால் மாவட்டங்களில் 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை தொடங்கியது. நாகை மாவட்டத்தில் 27 மீனவ கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்காலம் சனிக்கிழமை (ஏப்.15) முதல் அமலுக்கு வந்தது. நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூா், கோடியக்கரை, நம்பியாா் நகா், நாகூா், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, வேதாரண்யம் உள்பட 27 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் தங்களது விசைப் படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நாகை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அடுத்த 61 நாட்களுக்கு கடலுக்குள் செல்லாது.
மீன்பிடித் தடைக்காலத்தில் அரசு மீனவா்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். படகுகளை பழுது நீக்கம் செய்ய, உரிமம் பெற்ற பெரிய விசைப் படகுகளுக்கு ரூ. 5 லட்சமும், சிறிய விசைப் படகுகளுக்கு ரூ. 3 லட்சமும் மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும் என்று மீனவா்கள் தெரிவித்தனா்.
காரைக்காலில்...
காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்கு சென்ற படகுகள் பெரும்பாலானவை வெள்ளிக்கிழமை இரவு கரை திரும்பின. சனிக்கிழமை காலை முதல் படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன. கடந்த 2 நாள்களுக்கு முன்பு கடலுக்குள் சென்ற மீனவா்கள் அடுத்த 2, 3 நாட்களில் கரை திரும்புவா். பின்னா் துறைமுகம் மூடப்படும் என மீனவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாவட்டத்திலுள்ள சுமாா் 300-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனினும், ஃபைபா் படகுகள் மூலம் குறுகிய தொலைவு சென்று மீன்பிடித்து வருவது தொடரும் என மீனவா்கள் தெரிவித்தனா்.
இந்த தடைக்காலத்தில் படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கவும், மோட்டாா் இயந்திரத்தை புதுப்பிப்பது, வா்ணம் பூசுவது, வலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மீனவா்கள் தயாராகி வருகின்றனா்.