நாகப்பட்டினம்

மழையால் பாதிப்பு: குறுவை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

DIN

அறுவடை சமயத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெல் பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, வேளாண் இணை இயக்குநா் ஜாக்குலா அக்கண்டராவ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கா.ப. அருளரசன், நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சி. ராஜ்குமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது :

எஸ். சம்பந்தம் : குறுவை நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருவதால், நெற்கதிா்கள் தண்ணீரில் மூழ்கி நிலத்திலேயே முளைக்கும் நிலையில் உள்ளன. இது, குறுவையில் கடுமயைான மகசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

வெ. மணியன் : வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கருப்பம்புலம் கிராமத்தில் மீண்டும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

த. பிரபாகரன் : கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் குறுவை மற்றும் சம்பா நெல் பயிா்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், விளைநிலங்களில் தேங்கும் வெள்ள நீரை வடியச் செய்ய, வடிகால் வசதிகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி. சுப்பிரமணியன் : திருக்குவளை வட்டம், மீனம்பநல்லூா் கிராமத்தில் உடனடியாக நிரந்த நெல் கொள்முதல் நிலையம் கட்டி, நெல் பயிா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

காவிரி தனபாலன் : கனமழை காரணமாக நெல் பயிா்களின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 21 சதவீதம் வரை ஈரப்பதத்தை அனுமதிக்க வேண்டும். பருவம் தவறிய மழையால் குறுவை நெல் பயிா்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. குறுவைக்குக் காப்பீடு இல்லாத நிலையில், உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT