நாகப்பட்டினம்

திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதையில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி (வேதாரண்யம்) அகல ரயில் பாதையில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் வரையிலான ரயில்வே தடம் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. சுமாா் 30 கி.மீ. தொலைவுக்கு மீட்டா்கேஜ் பாதையாக இருந்து வந்த இந்த தடத்தில் நாள்தோறும் 3 முறை பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக, வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பை வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல இது வாய்ப்பாக அமைந்தது.

கோடியக்கரை வரை இருந்து வந்த ரயில் இயக்கம் இடைபட்ட காலத்தில் அகஸ்தியம்பள்ளியோடு நின்றுபோனது. மற்ற இடங்களில் மீட்டா் கேஜ் பாதைகள் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில்,1990-களில் பயணிகள் ரயில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

1999-ஆம் ஆண்டு முதல் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி வரையிலான தடத்தில் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் ரயில் பஸ் இயக்கம் தொடங்கிவைக்கப்பட்டது. அதுவும் 2004 டிச. 26-ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையுடன் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, இந்த தடத்தை அகல பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கி, அண்மையில் நிறைவடைந்தன.

இதையடுத்து, இந்த தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அகஸ்தியம்பள்ளி ரயில்வே நிலையத்தில் புதன்கிழமை பகலில் பெட்டிகள் இல்லாத ரயில் என்ஜினுக்கு பூஜை செய்யப்பட்டு, 100 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT