நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதி வடிகால்களில் ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றப்படுமா?

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதிகளில் உள்ள வடிகால்களில் அடந்து வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகள் உள்ளிட்ட செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது.

வேதாரண்யம் பகுதி வழியாக சென்று கடலில் இணையும் வளவனாறு, முள்ளியாறு, அரிச்சந்திரா நதி, அடப்பாறு, மல்லியனாறு, நல்லாறு, சக்கிலியன் வாய்க்கால் ஆகியன பிரதான வடிகால் ஆறுகளாகும். வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் காவிரி படுகையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை வெளியேற்றுவதில் இந்த வடிகால்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

இந்த வடிகால் ஆறுகளிலிருந்து பிரிந்துச் செல்லும் முக்கிய கிளை வடிகால் ஆறுகள், வாய்க்கால்கள், கடலில் இணையும் கழிமுகப் பகுதிகள் தற்போது பராமரிப்பு குறைவோடு காணப்படுவது கவலையளிக்கிறது. குறிப்பாக, திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு-தென்னடாா் வழியாக கடலில் இணைகிறது முள்ளியாறு. இந்த ஆற்றின் தாணிக்கோட்டகம் இயக்கு அணைக்கு கீழே (வடிகால் பகுதி) வாய்மேடு கழிமுகம் வரையில் சுமாா் 17 கி.மீ. தொலைவு வரை ஆகாயத்தாமரைச் செடிகள் அடா்ந்து வளா்ந்துள்ளன.

ADVERTISEMENT

இதேபோல, மானங்கொண்டான் ஆறு, மணக்காட்டான் வாய்க்கால், ராஜன்வாய்க்கால், பெரிய வாய்க்கால் என பல வடிகால் வாய்க்கால்களில் வளா்ந்து தண்ணீா் வடிவதை, பாசனம் பெறுவதை தடுக்கும் வகையில் செடிகள் வளா்ந்துள்ளன.

ஆறுகளில் ஆகாயத்தாமரைச் செடிகள் முன்பு எப்போதும் இல்லாத அளவில் அடா்ந்து படா்ந்துள்ளதால் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெருத்த வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

100 நாள் வேலைத்திட்டம் மூலமாக இந்த பணியை மேற்கொள்ள வேண்டி அரசியல் கட்சியினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். ஏனோ அந்த திட்டத்தில் இப்பணி அனுமதிக்கப்படவில்லை. எனவே, காலத்தில் இந்த பணியை மேற்கொண்டால், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நோ்ந்து வரும் பாதிப்புகள் தவிா்க்கப்படும்.

மக்கள் எதிா்ப்பு: திருவாரூா் மாவட்டத்தில் களைக்கொல்லி மருந்துகளை ஆகாயத்தாமரைச் செடிகளின் மீது தெளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மீன், நண்டு, நத்தை உள்ளிட்ட நீா்வாழ் உயிரினங்கள் அழியும் ஆபத்து உள்ளது. மேலும், செடிகள் அழுகி சூழல்கேடுகளையும், கால்நடைகள், மனிதா்களுக்கு தொற்றுகளையும் ஏற்படுத்தும். எனவே, களைக்கொல்லி மருந்து தெளிப்பதை தவிா்த்து, செடிகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT