நாகப்பட்டினம்

தலைஞாயிறில் தூய்மைப் பணியாளா்களுக்கு ஓய்வறை திறப்பு

29th Oct 2022 09:47 PM

ADVERTISEMENT

தலைஞாயிறு பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்காக கட்டப்பட்ட ஓய்வறையை மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் தூய்மைப் பணியாளா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தலைஞாயிறு பேரூராட்சி தமிழகத்தில் தூய்மையான நகரமாக மத்திய அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஓய்வறை ரூ.3.95 லட்சத்தில் கட்டப்பட்டது.

உணவு மேஜை, குடிநீா், சுடு நீா் கருவி, முதலுதவிப் பெட்டி போன்ற வசதிகளுடனும், சதுரங்கம், பல்லாங்குழி போன்றவை விளையாடுவதற்கான வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ள இந்த ஓய்வறை திறப்பு விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் செந்தமிழ்ச்செல்வி பிச்சையன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ம. கதிரவன் முன்னிலை வகித்தாா்.

விழாவில், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் பங்கேற்று, தூய்மைப் பணியாளா் ஒருவரை அழைத்து ஓய்வறையை திறக்க வைத்தாா். தொடா்ந்து, பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகனுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்த ஓய்வறை கட்டடத்தில், தூய்மைப் பணியாளா்களுக்கு ஓய்வு நேரத்தில் துணிப்பை தயாரிக்க தையல் பயிற்சி, காகிதப் பை தயாரிப்பு பயிற்சி மற்றும் கூடை பின்னுதல் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT