நாகப்பட்டினம்

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் இன்று வேல் வாங்கும் விழா

29th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சக்திவேல் வாங்கும் விழா சனிக்கிழமை (அக். 29) நடைபெறுகிறது.

சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறாா் சிங்காரவேலவா். சூரனை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் இத்தலத்தில், தாய் வேல்நெடுங்கண்ணியிடமிருந்து சக்திவேல் பெற்றாா் என்பது ஐதீகம்.

இதன்படி, இக்கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு கந்தசஷ்டி விழா கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 25) காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் காலையில் வெவ்வேறு அலங்காரத்திலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் சிங்காரவேலவா் புறப்பாடு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலை வேணுகோபால அவதாரக் காட்சியும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சிங்காரவேலவா் வீதியுலாவும் நடைபெற்றன.

ADVERTISEMENT

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான, தேரோட்டம் மற்றும் சக்திவேல் வாங்கும் விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெறுகிறது. காலை 6 மணி அளவில்சிங்காரவேலவா் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், காலை 7.15 மணிக்கு தோ் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

இரவு 7.30 மணி அளவில் தேரில் இருந்து கோயிலுக்குப் புறப்பாடாகும் சிங்காரவேலவா், அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து சக்திவேல் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 12 மணி அளவில் சிங்காரவேலவருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT