நாகப்பட்டினம்

வறுமை தடுத்தும் விடா முயற்சியால் வென்று ஆசிரியரானவர்! தினமணியால் கிடைத்த உதவி

19th Oct 2022 12:00 AM | கே.பி. அம்பிகாபதி

ADVERTISEMENT

வேதாரண்யம்: குடும்ப வறுமையால் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக் கல்வியைக்கூட பயில்வதில் தடைகள் ஏற்பட்ட நிலையிலும், விடா முயறிசியால் தனது கல்வித் திறனை மேம்படுத்திக்கொண்ட வீரபிரபாகரன் 15 ஆண்டுகால போராட்டத்துக்குப் பின்னர்,போட்டித் தேர்வை எதிர்கொண்டு திருக்குவளை அரசுப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக செவ்வாய்க்கிழமை பணியில் சேர்ந்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு அடுத்த ஆய்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனியப்பன் - அவயம்மாள் தம்பதி மகன் வீரபிரபாகரன்(33).ஒரு வயதிலேயே தந்தையை இழந்தவர்.

கோயில் நிலத்தில் கூரை வீடு,குடும்ப வறுமையிலும் தாயின் கூலி வேலை வருவாயில் தெருவிளக்கு வெளிச்சம், நாள்தோறும் மணக்குடி வையாபுரியார் அரசுப் பள்ளிக்கு நடந்தே சென்று படித்த வீரபிரபாகரன், 2005-2006 ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற்றார்(923). கலை இலக்கியத் துறையிலும் தனித் திறன்களை பெற்றிருந்தார்.

ADVERTISEMENT

ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதலோடு தனியார் ஆசிரியர் நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு சேர்ந்தார். முதல் மதிப்பெண் பெற்றமைக்காக பள்ளியில் பரிசாக வழங்கிய ரூ.5 ஆயிரம், அந்த காலகட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆய்மூரில் போட்டியிட்ட 7 வேட்பாளர்கள் கொடுத்த உதவித் தொகை ரூ.7 ஆயிரம், ஊர்மக்கள் அளித்தது என கிடைத்த ரூ.15 ஆயிரத்தை கட்டி படிக்கத் தொடங்கினார்.

கல்வி நிறுவனத்துக்கு கட்டவேண்டிய பாக்கித் தொகையை கட்ட முடியாமல் தவித்தார். இதையறிந்த நாகை ஆட்சியர் கல்விக் கடனுக்காகக் கொடுத்த கடிதத்துடன் அலைந்தும் பயனில்லை.

இதனால், கட்டணம் செலுத்தாததால் கல்வி நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், திருப்பூருக்கு வேலை தேடிச்செல்ல ஆயத்தமானார்.

இந்த நிலையில், வீரபிரபாகரனின் நிலை குறித்து 21.02.2007  தினமணியில் 'ஆட்சியர் கடிதத்துடன் அலைந்தும் கிடைக்காத கல்விக்கடன்.. ஆசிரியர் பயிற்சியைத் தொடரமுடியாத மாணவர்' என்ற தலைப்பில் சிறப்புச் செய்தி முதல் பக்கத்தில் வெளியானது.

இதையடுத்து, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் மாணவர் கல்வியைத் தொடர பொருளாதார நிலையில் உதவினர். அவரின் அப்போதைய கல்வி தேவைக்கு அதிகமாகவே கிடைத்த தொகையை நண்பனின் கல்விச் செலவுக்கு வழங்கி ஆசிரியர் பயிற்சியை தொடர்ந்தார்.

இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்த வீரபிரபாகரன், அவர் படித்த ஆய்மூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் மாதம் ரூ.3 ஆயிரம் சம்பளத்துக்கு தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இதேபோல, மணக்குடி அரசுப் பள்ளியிலும் பணியாற்றியுள்ளார்.

இதனிடையே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் (திறந்த நிலையில்) இளங்கலை வரலாறு(பி.ஏ)பட்டத்தையும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முதுகலை (எம்.ஏ) பட்டத்தையும் கற்றுத் தேர்ந்தார். இடையில், கூட்டுறவு விற்பனைக் கடையில் தினக்கூலி அடிப்படையில் 6 மாதங்கள் எடையாளர் பணியையும், ஓராண்டு திருத்துறைப்பூண்டியில் தனியார் துணிக் கடையிலும் வேலை பார்த்தார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை வரலாறு பாடம் நடத்திய வீரபிரபாகரன்.

2019 முதல் கொருக்கை கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள படித்த இளைஞர்கள் போட்டித்தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில், முதுகலை ஆசிரியர் நியமனத்துக்கு நடைபெற்ற போட்டித் தேர்வை எழுதிய வீரபிரபாகரன் அதில் தேர்ச்சி பெற்றார்.

தற்போது, திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை வரலாற்று ஆசிரியராக பணிநியமணம் செய்யப்பட்டுள்ளார்.

முதல் நாளன்று, ஆசிரியர் வீரபிரபாகரன் தனது வயதான தாயுடன் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியர் முன்பாக பணியில் சேர்ந்தார். பின்னர், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாறு பாடம் நடத்தினார்.

இது குறித்து வீரபிரபாகரன் கூறியது:

ஆசிரியராக வேண்டும் எனபதுதான் எனது இலக்கு. தொடக்கத்தில் தடை இருந்தது. தினமணியில் வெளியான செய்தியால் பலர் உதவினர். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்து அதை செய்தார்கள். கல்வியை மட்டும் மேம்படுத்திக்கொண்டேன். என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு கற்றலில் தடையில்லாது வாழ்நாள் முழுவதும் பணியாற்றுவேன். திருமணம் செய்துகொண்டு, அம்மாவுடன் பயணிப்பேன். நல்ல கல்வியை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது எனது கடமை என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT