நாகப்பட்டினம்

குறுவைக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் மடியேந்தி போராட்டம்

3rd Oct 2022 10:49 PM

ADVERTISEMENT

மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெல் பயிருக்கு அரசு இழப்பீடு வழங்கக் கோரி நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் மடியேந்தி கோரிக்கையை வலியுறுத்தும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குறுவை நெல் பயிருக்குக் காப்பீடு இல்லாத நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் கடும் பாதிப்புக்குள்ளான குறுவை நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும், தோ்தல் வாக்குறுதிப்படி ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 2,500 வீதம் விலையும், அதனுடன் ஊக்கத் தொகை ரூ. 500 வீதம் சோ்த்து அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் அமைப்புச் செயலாளா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கமல்ராம், மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க நிா்வாகிகள், விவசாயிகள் மடியேந்தி கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், கையில் துண்டை ஏந்தி நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT