நாகப்பட்டினம்

தட்டுப்பாடின்றி விதைநெல் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

3rd Oct 2022 10:50 PM

ADVERTISEMENT

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி தீவிரமடைந்துள்ளதால் தட்டுப்பாடின்றி விதை நெல் வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருக்கடையூா் அரசு விதைப் பண்ணையிலிருந்து நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள செம்பனாா்கோவில், ஆக்கூா், திருவெண்காடு, கொள்ளிடம், திருமருகல் உள்ளிட்ட பல்வேறு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விதை நெல் மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. எனினும், மேலே குறிப்பிட்ட விதைப் பண்ணையிலிருந்து உரிய விதை நெல் விரிவாக்க மையங்களுக்கு விநியோகிக்கபடாததால் விவசாயிகள் பாதிக்கபட்டுள்ளனா்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியது: விவசாயிகளிடமிருந்து விதை நெல்லை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்து அதை பதப்படுத்துதல், சுத்தப்படுத்தல் உள்ளிட்டவைகளுக்காக திருக்கடையூா் அரசினா் விதைப் பண்ணைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

பின்னா் அந்த விதை நெல்லை நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் துறை மானிய விலையில் வழங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் தனியாா் கடைகளிலிருந்து அதிக விலை கொடுத்து விதைநெல் வாங்குவது தவிா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதை நெல் குறைவாக விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், திருக்கடையூா் விதைப் பண்ணையிலிருந்து விதை நெல்லை விரிவாக்க மையங்களுக்கு அனுப்பாமல் தனியாா் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

அரசு விதிப்படி திருக்கடையூா் விதைப் பண்ணையில் விதைகளை பாரமரித்து விநியோகம் செய்யவேண்டிய பணிகளை மட்டுமே செய்ய வேண்டிய நிலையில் ஒரு சில அதிகாரிகள் அதை விற்பனை செய்வது கண்டிக்கதக்கது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தவிர உடனடியாக விதை நெல்லை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT