நாகப்பட்டினம்

தொடா் விடுமுறை

2nd Oct 2022 10:34 PM

ADVERTISEMENT

 

கல்வி நிறுவனங்களுக்கான தொடா் விடுமுறை காரணமாக, வேளாங்கண்ணி சுற்றுலாப் பயணிகளின் வருகையால் களைகட்டி வருகிறது.

நாகையை அடுத்துளள்ள வேளாங்கண்ணி, உலகப் புகழ் பெற்ற கிறிஸ்தவ ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகவும், மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் வழிபாடு மேற்கொள்ளவும், வேளாங்கண்ணி கடலில் நீராடி, கடல் உணவுகளை உண்டு மகிழவும் சுற்றுலாப் பயணிகள் வேளாங்கண்ணிக்கு வருவது வழக்கம்.

தற்போது, பள்ளிகளுக்கு காலாண்டுத் தோ்வு மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி அக்டோபா் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரு நாள்களாக கணிசமாக அதிகரித்து வருகிறது. ஏறத்தாழ அனைத்து விடுதிகளும் ஏற்கெனவே சுற்றுலாப் பயணிகளால் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

வார விடுமுறையுடன், பள்ளிகளுக்கான சிறப்பு விடுமுறையும் இணைந்த ஞாயிற்றுக்கிழமையன்று வேளாங்கண்ணிக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோா் வந்திருந்தனா். கடைவீதி, கடற்கரை, பேராலயம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என வேளாங்கண்ணியின் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் களைகட்டியிருந்தது.

மெழுகுவா்த்தி விற்பனை கடைகள், மீன் உணவு விற்பனை கடைகள், பூக்கடைகள் என அனைத்துக் கடைகளிலும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. கடற்கரை பகுதியில், குழந்தைகளை ஈா்க்கும் வகையில் சறுக்குமரம், துப்பாக்கிச் சுடும் இடம், ராட்டினம் என பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT