நாகப்பட்டினம்

தீபாவளி: நாகையில் கதா் துணிகள் விற்பனை இலக்கு ரூ. 5 லட்சம்

2nd Oct 2022 10:34 PM

ADVERTISEMENT

 

நாகை மாவட்டத்தில் கதா் துணிகளுக்கான தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 5 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் காதிகிராப்ட் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த விற்பனை நிலையத்தில், தீபாவளி கதா் சிறப்பு விற்பனையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த ஆட்சியா் மேலும் பேசியது:

தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் லட்சக்கணக்கான ஏழை, எளிய நூற்போா், நெசவாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பேருதவியாற்றி வருகிறது. காந்தியடிகளின் சுதந்திரப் போராட்ட சின்னமாக திகழும் கதா் ஆடையை அணிய வேண்டியது இந்தியா்களின் தலையாய கடமைகளில் ஒன்று.

ADVERTISEMENT

நிகழாண்டில், நாகை மாவட்டத்தில் கதா் துணிகளுக்கான தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 5 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கதா் பருத்தி, பட்டு, பாலிஸ்டா் ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடியும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும், சுத்தமான இலவம் பஞ்சினால் செய்யப்பட்ட மெத்தை, தலையணை மற்றும் மெத்தை விரிப்புகளும் காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அரசு அலுவலா்கள், பணியாளா்கள், ஆசிரியா்கள் அனைவரும் தலா ஒரு கதா் ஆடையாவது வாங்கி உடுத்தி, நெசவாளா்களின் குடும்ப வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா், காதிகிராப்ட் மேலாளா்கள் முருகன், கு. நாகராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT