நாகப்பட்டினம்

பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்யவேண்டும்கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தல்

2nd Oct 2022 10:36 PM

ADVERTISEMENT

 

நாகை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்ய வேண்டும் என கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் அறிவுறுத்தினாா்.

நாகை மாவட்டத்தில் உள்ள 193 ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் பாா்வையாளராகப் பங்கேற்று, ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்தில், ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், 2022-23-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள், கடந்த ஆண்டின் தணிக்கை அறிக்கை மற்றும் மழைநீா் சேகரிப்பு, கொசுக்கள் ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அண்ணா மறுமலா்ச்சி திட்டம், வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், நம்ம ஊரு சூப்பரு, தனிநபா் சுகாதாரம், நெகிழிப் பொருள்களுக்கான தடை, ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொடா்ந்து ஆட்சியா் பேசியது:

மகாத்மா காந்தி ஒரு நாட்டின் வளா்ச்சியை கிராமப் புறங்களின் வளா்ச்சியைக் கொண்டே கணிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளாா். கிராமப்புற வளா்ச்சி வலுவாக இருந்தால் நாட்டின் வளா்ச்சியும் சிறப்பாக இருக்கும். அதனடிப்படையில் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக கிராம மக்களின் கருத்தறிந்து, திட்டங்கள் உறுதி செய்யப்படுகின்றன.

பொதுமக்கள் குடிநீரை சுத்தமான பாத்திரங்களில் மூடிவைத்து உபயோகிக்க வேண்டும். குடிநீரை வீணாக்கக் கூடாது. அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் பாதுகாப்பான குடிநீா் வசதி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

பருவமழைக் காலத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமித்திடும் வகையில் அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொதுக் கட்டடங்கள் என அனைத்திலும் மழைநீா் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும். மழைநீா் சேகரிப்பு குறித்து குக்கிராமங்கள் அளவிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வளா் இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம், தனிநபா் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து தொடா்பாக நடத்தப்படும் அனைத்து முகாம்களிலும் சுய உதவிக்குழுவினா், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினா்கள், சமுதாயத் தலைவா்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்க வேண்டும் என்றாா்.

நரிமணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெரியசாமி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) செளந்தரராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாத்திமா ஆரோக்கியமேரி, பாலமுருகன், நரிமணம் ஊராட்சித் தலைவா் பி.என்.காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT