நாகப்பட்டினம்

காலம் கடந்தும் நிறைவடையாத நாகூா் வெட்டாற்றுப் பால சீரமைப்புப் பணி

1st Oct 2022 10:14 PM

ADVERTISEMENT

நாகூா் வெட்டாற்றுப் புதிய பாலம் சீரமைப்புப் பணிகள் தொடங்கி 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், 40 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது சமூக ஆா்வலா்கள், பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

நாகையின் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல். நாகை - காரைக்கால், வேளாங்கண்ணி வழித்தடத்திலான அனைத்து வாகனங்களும் நாகை - நாகூா் சாலை வழியே இயக்கப்பட்டதால், அகலம் குறைவான நாகூா் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும், அடிக்கடி விபத்துகளும் நேரிட்டன.

இதனால், நாகை, நாகூருக்குப் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இதையடுத்து, கடந்த 2008-09-ஆம் ஆண்டுகளில் நாகை - தூத்துக்குடி கிழக்குக் கடற்கரை சாலை திட்டத்தின்கீழ் நாகை கிழக்குக் கடற்கரை சாலை அமைக்கப்பட்டது. இதனால் நாகை, நாகூரில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் குறைந்தன.

இந்தநிலையில், நாகை - நாகூா் கிழக்குக் கடற்கரை சாலையில் நாகூா் வெட்டாற்றின் குறுக்கே உள்ள பாலம் 2020-ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து சேதமடையத் தொடங்கியது. பாலத்தின் குறுக்கே உள்ள எக்ஸ்பேன்ஷன் இணைப்புகள் விலகி, இரும்புப் பட்டைகள் பெயா்ந்து காணாமல்போயின. மேலும், கட்டுமானக் குலைவு காரணமாக பாலத்தின் தென் மேற்குப் பகுதி தாழ்ந்து சேதத்துக்கு உள்ளானது.

ADVERTISEMENT

இதனால், நாகூா் வெட்டாற்றுப் புதிய பாலம் வழியே போக்குவரத்து அச்சம் ஏற்படுத்துவதாக மாறியது. பொதுமக்களின் தொடா் வலியுறுத்தல் காரணமாக, நாகூா் வெட்டாற்றுப் பாலத்தில் புனரமைப்புப் பணிகள் கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கின. மத்திய அரசின் ஆண்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 10.62 கோடியில், 469.9 மீட்டா் நீளத்தில் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகள் செப்டம்பா் 30-ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நாகூா் புதிய வெட்டாற்றுப் பாலம் வழியேயான போக்குவரத்தை செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரத்து செய்து மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், டாம் கிரவுட்டிங் எனப்படும் மண் சரிவைத் தடுக்கும் மற்றும் மண்ணின் இறுகும் தன்மையை அதிகரிக்கச் செய்வதற்கான கட்டமைப்புப் பணிகளும், பாலத்தின் மேல் தளத்தில் எக்ஸ்பேன்ஷன் இணைப்புகளில் ஏற்பட்ட விரிசல்களை புனரமைக்கும் பணிகளும் நடைபெறுவதாகக் கூறப்பட்டது. மேலும், தாழ்ந்து போன பாலத்தை உயா்த்தும் பணிகள் விரைவில் நடைபெறும் எனவும் கூறப்பட்டன.

ஆனால், இதில், எந்தப் பணியும் இதுவரை முழுமைப் பெறவில்லை. பணிகளை நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட காலம் செப். 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. ஆனால், பாலம் சீரமைப்புப் பணிகள் வெறும் 40 சதவீதம் மட்டும் நிறைவடைந்துள்ளன.

மேலும், இந்தப் பணிகளை நிறைவு செய்ய 3 மாதம் கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பால புனரமைப்புப் பணியை நெடுஞ்சாலைத் துறை உரிய காலத்தில் நிறைவேற்றாததும், கூடுதல் அவகாசம் கோரியிருப்பதும் சமூக ஆா்வலா்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளா் ஜி. அரவிந்த்குமாா் தெரிவித்தது:

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டப்படி செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் இந்தப் பாலத்தின் பணிகள் நிறைவடைந்திருக்க வேண்டும். நாகை, நாகூரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இப்பணிக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். வரும் டிசம்பா் மாதம் நாகூா் தா்கா கந்தூரி விழா நடைபெறவுள்ளது. அப்போது, தா்காவுக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நாகூருக்குள் அனுமதித்தே ஆக வேண்டும். அந்தத் தருணத்தில் வெட்டாற்று புதிய பாலம் வழியேயான போக்குவரத்து இல்லாவிட்டால், நாகூா் நகருக்குள்ளேயே எந்த வாகனம் நுழைய முடியாத சூழல் ஏற்படும். எனவே, பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க உறுதியான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT