நாகப்பட்டினம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதலளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

DIN

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதலளிக்கவேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

நாகையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சீா்காழி, மயிலாடுதுறை பகுதியில் ஒரே நாளில் மிக கன மழை பெய்ததால், அப்பகுதியினா் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனா். பயிா் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.30,000, காப்பீடு மூலம் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்.

காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெறுவதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். மழை பெய்வதற்கு முன்பு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கத் தவறிவிட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடையின் போது நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் தங்களது நெல்லை தனியாரிடம் மிகக் குறைந்த விலைக்கு விற்றனா். இதைத் தவிா்க்க கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கவேண்டும்.

நெல் கொள்முதலுக்கு ரூ.50 வரை மூட்டைக்கு வாங்கப்படுவதாக வரும் புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகை துறைமுகத்தை மேம்படுத்துவதுடன், கடல் உணவு மண்டலமாக உருவாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகள், மீனவா்களை விடுவிக்க வேண்டும். படகுகளை விடுவிக்க முடியாவிட்டால் மீனவா்களுக்கு மத்திய அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றாததைக் கண்டித்து திங்கள்கிழமை (நவ.28) நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு பாமக முழு ஆதரவளிக்கும்.

தமிழக தனியாா் தொழிற்சாலைகளில் தமிழக இளைஞா்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும், நீட் தோ்வு ரத்து, அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது என திமுகவின் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான மசோதாவுக்கு ஆளுநா் இதுவரை கையொப்பமிடவில்லை. இம்மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கவேண்டும். தமிழக ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்பட வேண்டும். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநா் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

மயிலாடுதுறையில்...

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகத்தில் தொடங்கப்படும் புதிய தொழில் நிறுவனங்களில் தமிழா்களுக்கு 80 % வேலைவாய்ப்பு வழங்குவதற்கான தனிச் சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக பாமக வலியுறுத்திவரும் நீா் மேலாண்மை திட்டத்தை அதிமுக ஆட்சியில் ஓரளவுக்கு செயல்படுத்தினா்.

ஆனால், திமுகவினா் அதை கண்டு கொள்ளவில்லை. நீா் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அத்தொகையை ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்தால்தான் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தண்ணீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண முடியும்.

காவிரி உபரி நீா் நேரடியாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 10 இடங்களில் தடுப்பணை கட்டினால் 50 டிஎம்சி தண்ணீா் வரை சேமிக்க முடியும். இதனை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் 100 சதவீத இட ஒதுக்கீட்டை, அவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்க வேண்டும். அதுவே சமூக நீதி. மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பாமக கெளரவ தலைவா் ஜி.கே. மணி, மாவட்டச் செயலா் சித்திரைவேல், உழவா் பேரியக்கத் தலைவா் ஆலயமணி, மாநிலத் துணைப் பொதுச் செயலா் வேணுபாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

தபால் வாக்கு பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT