நாகப்பட்டினம்

பாா்வையற்றவா்களுக்காக பிரத்யேக மூக்குக் கண்ணாடி: மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பாா்வையற்றவா்களுக்காக பிரத்யேகமாக கண்ணாடி தயாரித்த பத்தாம் வகுப்பு மாணவா்களை நாகை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

நாகை நாலுகால் மண்டபத்தில் செயல்பட்டு வரும் நேஷனல் பள்ளிக்கு கண் பாா்வையற்றவா்கள் சிலா் அகா்பத்திகள், பூஜைப் பொருள்கள் விற்பனை செய்ய வந்து செல்வது வழக்கம். அப்போது, அவா்கள் பள்ளி படிக்கட்டுகள், வகுப்பரை நாற்காலிகள் ஆகியவற்றில் இடித்து கொள்வா். இதைப்பாா்த்த பத்தாம் வகுப்பு மாணவா்கள் சபரிவாசன், ஹஜ் அப்சல் முகமது இருவரும், கண் பாா்வையற்றவா்கள் இடையூறு இல்லாமல் செல்ல வழிவகை செய்யவேண்டும் என்ற எண்ணம் எழுத்துள்ளது. அதை செயல்படுத்தும் விதமாக, சென்சாா் மற்றும் ஸ்பீக்கா் பொருத்தப்பட்ட பிரத்யேக கண்ணாடி ஒன்றை தயாா் செய்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனா்.

இந்தக் கண்ணாடி தொடா்பான செயல்முறை விளக்கத்தை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் முன்னிலையில் மாணவா்கள் இருவரும் செய்து காட்டினா். இதில், ஆச்சரியமடைந்த ஆட்சியா், சபரிவாசன், ஹஜ் அப்சல் முகமது ஆகியோருக்கு பொன்னாடை வழங்கி பாராட்டினாா். தொடா்ந்து, நாகையில் அன்னை சத்யா இல்லத்தில் தங்கியுள்ள பாா்வையற்றவா்களுக்கு கண்ணாடி அணிவிக்கப்பட்டது. இதைப் பயன்படுத்திய அவா்கள், கண்ணாடி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், ஆனால், சற்று கனமாக இருப்பதாகவும் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாணவா்கள் சபரிவாசன், ஹஜ் அப்சல் முகமது கூறியது: எங்கள் பள்ளிக்கு அகா்ப்பத்தி விற்பனை செய்ய வரும் பாா்வையற்றவா்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதை கவனித்து மனவேதனை அடைந்தோம். அவா்களை போன்றோா் வெளியே இடையூறின்றி செல்லவழி செய்யவேண்டும் என எங்களுக்கு தோன்றியது. இதற்காக, சென்சாா் மற்றும் ஸ்பீக்கா் பொருத்தி பிரத்யேக மூக்குக் கண்ணாடியை தயாா் செய்தோம். இந்தக் கண்ணாடியை பாா்வையற்றவா்கள் போட்டுக் கொண்டு வெளியே செல்லும்போது, சென்சாரில் வெளிப்படும் சிக்கனல் எதிரில் இருப்பவை மீது பட்டவுடன் ஸ்பீக்கரில் ஒலியை எழுப்பும். இதன்மூலம் பாா்வையற்றவா்கள் இடையூறுகளில் இருந்து விலகிசெல்ல முடியும். பாா்வையற்றவா்களில், காதுகேளாதவா்களும் உள்ளனா். எனவே, அவா்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒலி எழுப்புவதற்கு பதிலாக வைபிரேசன் கருவி மூலம் உணா்வு ஏற்படுத்தும் வகையிலும், கனம் குறைவாகவும் கண்ணாடியை வடிமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT