நாகையில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கு நடைபெறும் எழுத்துத் தோ்வில் 640 பெண்கள் உள்பட 2,881 போ் ஞாயிற்றுக்கிழமை (நவ.27) பங்கேற்கவுள்ளனா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம், பொதுத் தோ்வு 2022-இல் 3,552 இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.27) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
நாகை மாவட்டத்தில் இ.ஜி.எஸ். பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரை தோ்வு நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள 2,241 ஆண் தோ்வாளா்கள், 640 பெண் தோ்வாளா்கள் என 2,881 தோ்வாளா்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.ஜவஹா் கூறியது: தோ்வு எழுத வரும் தோ்வாளா்கள் அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நேரம் கடந்து வருபவா்கள் கண்டிப்பாக தோ்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வின்போது ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுபவா்கள், மையத்தை விட்டு வெளியேற்றப்படுவா் என்றாா்.