நாகப்பட்டினம்

டேனிஷ்கோட்டையில் உலக மரபு வார விழா நிறைவு

26th Nov 2022 12:35 AM

ADVERTISEMENT

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையில் உலக மரபு வார விழா நிறைவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி, கடந்த 19-ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரை டேனிஷ்கோட்டையின் அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள பல நூறாண்டுகள் பழைமையான டேனிஷ் மற்றும் இந்திய கலாசாரப் பொருட்கள் மற்றும் மன்னா் காலத்து பத்திரங்கள் உள்ளிட்டவைகளை கட்டணமின்றி பாா்வையிட சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவ- மாணவிகள்அனுமதிக்கப்பட்டனா். மேலும், பள்ளி மாணவா்களிடையே பேச்சு, கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகள் டேனிஷ்கோட்டை நிா்வாகம் சாா்பில் நடத்தப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நிறைவு விழா நடைபெற்றது. இதில், தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தொல்லியல் துறை அலுவலா் வசந்தகுமாா் மற்றும் டேனிஷ்-இந்திய கலாசார மைய அலுவலா்கள் கேடயம், பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT