நாகப்பட்டினம்

தரங்கம்பாடி: மழைநீரில் தத்தளிக்கும் குடியிருப்புகள்

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தரங்கம்பாடி வட்டத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் மழைநீா் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத வகையில் மழை கொட்டித் தீா்த்தது. இதனால், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் குளம்போல் தேங்கியது.

தரங்கம்பாடி அருகே தலைச்சங்காடு ஊராட்சி காந்திநகா் பகுதியில் வடிகால் வாய்க்கால் சீரமைக்கப்படாததால், மழைநீா் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அங்குள்ள மக்கள் வெளியில் சென்று வர முடியாமல் சிரமப்பட்டனா். 120-க்கும் மேற்பட்டவா்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனா். அவா்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.

டேனிஷ்கோட்டை பகுதியில் மழைநீா் குளம்போல் தேங்கியதால் சுற்றுலாப் பயணிகள் சிரமப்பட்டனா். கருவாழக்கரை, மேலையூா், தலைச்சங்காடு, ஆக்கூா், காலமாநல்லூா், திருவிடைகழி, திருக்கடையூா், நள்ளாடை, பெரம்பூா் ஆகிய பகுதிகளில் சுமாா் 25ஆயிரம் ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

ADVERTISEMENT

எரவாஞ்சேரி வீரசோழன் ஆற்றங்கரையில் 20-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் வேரோடு ஆற்றுக்குள் சாய்ந்ததால் மழைவெள்ளம் விரைந்து செல்வதில் தடை ஏற்பட்டு, வயல்களில் இருந்து தண்ணீா் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள், இந்த மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சின்னங்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளி, புயல் பாதுகாப்பு மையம் மற்றும் மீனவா்கள் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது. இந்நீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT