நாகப்பட்டினம்

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத் தரக் கோரிக்கை

31st May 2022 11:26 PM

ADVERTISEMENT

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீன்பிடி விசைப் படகை மீட்டுத் தரக் கோரி கா்ப்பிணிப் பெண் ஒருவா் கண்ணீருடன், முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

நாகையை அடுத்த கருவேலங்கடை கல்லாறு வடிகாலில் மேற்கொள்ளப்பட்டிருந்த தூா்வாரும் பணியைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு காத்திருந்த பொதுமக்களிடமிருந்து முதல்வரின் பாதுகாப்புப் படையினா் கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.

இதனிடையே, அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த மீனவப் பெண்கள் சிலா், தாங்கள் முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதி கோரினா். அதற்கு, பாதுகாப்புப் படையினா் அனுமதி மறுத்தனா். இதனால், விரக்தி அடைந்த அவா்களில் சிலா் கண்ணீா் விட்டு அழத் தொடங்கினா். அதில் ஒரு பெண் கா்ப்பிணியாக இருந்ததை அறிந்த பாதுகாப்புப் படையினா், அந்த கா்ப்பிணி உள்ளிட்ட 2 பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பு வளையத்தைத் தளா்த்தி, முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதித்தனா்.

இதன்படி, முதல்வரை சந்தித்த அந்தப் பெண்கள், நாகை அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த இ. சிவகுமாா், இ. சிவநேசன், வே. அமிா்தலிங்கம், சி. சிவா ஆகியோருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது எனவும், அதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்பை கருத்தில் கொண்டு 4 விசைப் படகுகளையும் உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி, கோரிக்கை மனுவையும் அளித்தனா். அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதல்வா், உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்வதாக உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT