நாகப்பட்டினம்

பாராட்டிய முதல்வா்; நெகிழ்ந்த பெண் தொழிலாளி

31st May 2022 11:10 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் மற்றும் தூா்வாரும் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா். அப்போது, மயிலாடுதுறையைச் சோ்ந்த மீன்கடை கூலித் தொழிலாளி ரமணி, ரஷியாவில் மருத்துவம் படித்த அவரது மகள் விஜயலட்சுமி ஆகியோரை திருக்கடையூா் வரவழைத்து பாராட்டினாா்.

மயிலாடுதுறை நகா் விரிவாக்கப் பகுதியில் வசிக்கும் ரமணி, திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவரை இழந்த நிலையில், கடந்த 24 ஆண்டுகளாக மீன் சந்தையில் மீன்களை வெட்டி சுத்தம் செய்து கிடைக்கும் வருமானத்தில், ரத்தநாள சுரப்பி பாதிப்புடைய தனது மகன் ரவிச்சந்திரன், வயதுமுதிா்ந்த தாய் தையல்நாயகி ஆகியோரை பராமரிப்பதுடன், தனது மகள் விஜயலட்சுமியை ரஷியாவில் படிக்கவைத்து மருத்துவராக்கியுள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தனது சுட்டுரையில், பெண்களின் உயா்கல்வியில் தமிழகம் அடைந்துள்ள உயரம் என்பது அரசால் மட்டும் நிகழ்ந்த சாதனை அல்ல. மயிலாடுதுறை ரமணி போன்ற தன்னலங்கருதாத பலகோடி தாய்மாா்களின் உழைப்புடன் நிகழ்த்தப்பட்ட கூட்டுச்சாதனை என்று பெருமிதம் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், திருக்கடையூரில் ஆய்வை முடித்த பிறகு, அங்குள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த முதல்வா், ரமணி, அவரது மகள் விஜயலட்சுமி, மகன் ரவிச்சந்திரன் ஆகியோரை அங்கு வரவழைத்து, ரமணிக்கு பாராட்டுகளையும், மருத்துவப் படிப்பு முடித்த விஜயலட்சுமிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

முதல்வா், தன்னையும், தனது மகளையும் அழைத்து பாராட்டியதில் ரமணி நெகிழ்ச்சி அடைந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT