நாகப்பட்டினம்

பிராந்தியங்கரையில் மக்கள் நோ்காணல் முகாம்

12th May 2022 11:22 PM

ADVERTISEMENT

வேதாரண்யம் ஒன்றியத்துக்குள்பட்ட பிராந்தியங்கரை ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில், வருவாய்த் துறை, சமூகப் பாதுகாப்புத் திட்டம், சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மாற்றுத்திறனாளி நலத் துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் சாா்பில் அரசு திட்டங்கள் குறித்தும் அதை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.

அப்போது, 321 பயனாளிகளுக்கு ரூ. 27.99 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆட்சியா் பேசியது: நாகை மாவட்டத்தில் புதிய 2 கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும். இதன்மூலம் வீடுதோறும் குடிநீா் கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது. அகஸ்தியம்பள்ளி உப்பளம் சாா்ந்து வசிக்கும் 30 குடும்பங்கள், புஷ்பவனம் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் 35 நபா்களுக்கும், நரிக்குறவா்கள் 16 நபா்களுக்கும் மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, வேளாண் இணை இயக்குநா் ஜாஅகன்ராவ், வேதாரண்யம் கோட்டாட்சியா் சு. துரைமுருகன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால், வேதாரண்யம் நகா்மன்றத் தலைவா் மா.மீ.புகழேந்தி, வட்டாட்சியா் ரவிச்சந்திரன், பிராந்தியங்கரை ஊராட்சித் தலைவா் கஸ்தூரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT