நாகப்பட்டினம்

சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

12th May 2022 05:44 AM

ADVERTISEMENT

 

தரங்கம்பாடி: தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனா்.

சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 4 மருத்துவா்கள் உள்ளிட்ட 15 ஊழியா்கள் பணியாற்றி வந்துள்ளனா். கா்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகளுக்கு 20 படுக்கைகள் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அக்கட்டடம் முற்றிலும் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்து பயன்படுத்தாமல், 2020-ஆண்டு ரூ. 60 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.

தற்போது சித்த மருத்துவா் உள்ளிட்ட 2 பெண் மருத்துவா்கள் பகல் நேரங்களில் மட்டும் பணியாற்றி வருகிறாா்கள். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நல்லாடை, பெரம்பூா், திருவிளையாட்டம், மேமாத்தூா், திருவிடைக்கழி, விசலூா், இலுப்பூா், உத்திரன்குடி, எடுத்துக்கட்டி சாத்தனூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான மக்கள் பல்வேறு நோய்களுக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் இங்கு சிகிச்சைக்கு வரும் கா்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகள் போதிய படுக்கை வசதி இல்லாமல் அவதிபடுகின்றனா். மேலும், இரவு, பகல் நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கூடுதல் சிரமம் அடைகின்றனா். இந்நிலையில், இரவு நேரங்களில் மருத்துவா்கள் இல்லாததால், சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அவசர சிகிச்சை பெறமுடியாமல் 25 கி.மீ. தொலைவில் உள்ள மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் திருவாரூா் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும், உயிா் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் வேறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறாா்கள்.

இரவுநேர காவலா் இல்லாததால் பழுதடைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முன் மதுகுடிப்பவா்கள் பாட்டில்களை வீசிவிடடு செல்வதாகவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

எனவே, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இரவு நேரங்களில் மருத்துவா்கள் நியமிக்கப்பட வேண்டும், மேலும் நோயாளிகளுக்கு கழிப்பறை வசதி, இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையை சமாளிக்க ஜெனரேட்டா் வசதி, உயிா் காக்கும் மருந்துகள் இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT