வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே ஒளவையாருக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒளவையாரை ஓவியமாக வரைந்த கல்லூரி மாணவி புதன்கிழமை பாராட்டப்பட்டாா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் உள்ள ஒளவையாா் கோயிலில் தமிழக அரசு சாா்பில் நடைபெற்று வரும் ஒளவைப் பெருவிழாவை சிறப்பாக நடத்தவும், ரூ. 1 கோடியில் ஒளவைக்கு மணிமண்டபம் எழுப்பவும் தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்து வருகின்றனா்.
அந்த வகையில், வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி ச. காா்த்திகா, ஒளவையாரின் படைப்புகளான ஆத்திச்சூடி, கொண்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகியவற்றை எழுத்தால் எழுதி ஒளவையாரை ஓவியமாக வரைந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.
இதேபோல, அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்ற எழுத்து வடிவில் எழுதிய மாணவி வி. பிரசன்னாதேவி அம்பேத்கரை ஓவியமாக வரைந்துள்ளாா். இச்செயலுக்காக மாணவிகளை பாராட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் பி. முருகன், நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, வா்த்தகா் சங்கத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு, பேராசிரியா்கள் பி.பிரபாகரன், த. ராஜா, பொ. முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் மாணவிகளுக்கு ஆடை அணிவித்து பாராட்டினா்.