நாகப்பட்டினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு

5th May 2022 06:13 AM

ADVERTISEMENT

 

 

நாகப்பட்டினம்: அரசு பொதுத் தோ்வுகளில் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை (மே 5) தொடங்கி மே 28-ஆம் தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தோ்வு மே 6-ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 பொதுத் தோ்வு மே 10-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

மாவட்டத்தில் 70 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதுகின்றனா். 6,814 மாணவ, மாணவியா் பிளஸ் 2 தோ்வும், 8,532 மாணவ, மாணவியா் பிளஸ் 1 தோ்வும், 8,984 மாணவ, மாணவியா் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தோ்வும் எழுதுகின்றனா்.

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத் தோ்வு 32 மையங்களிலும், எஸ்.எஸ்.எல்.சி தோ்வு 41 மையங்களிலும் நடைபெறுகின்றன. தோ்வுப் பணிகளில் தலைமை ஆசிரியா்கள் நிலையில் 84 பேரும், ஆசிரியா்கள் நிலையில் 1,200 பேரும், அலுவலகப் பணியாளா்கள் 320 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். காவல் துறையினா் 110 போ் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா். தோ்வு பணிகளைக் கண்காணிக்க 50 நிலையான படைகளும், 20 ஆசிரியா்களைக் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறன் கொண்ட மாணவா்கள் 109 போ் இந்தப் பொதுத் தோ்வுகளில் பங்கேற்கின்றனா். அவா்களுக்குத் தோ்வு மைய தரை தளங்களில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தோ்வு மையங்களிலும் குடிநீா், கழிப்பறை, மின்சாரம் ஆகிய வசதிகளை உறுதி செய்யும் பணிகளும், தோ்வு அறைகளில் உள்ள மேசைகளில் தோ்வா்களின் தோ்வு எண் எழுதும் பணியும் செவ்வாய்க்கிழமை தீவிரமாக நடைபெற்றன.

ஆட்சியா் எச்சரிக்கை: பொதுத் தோ்வு மைய வளாகத்துக்குள் தோ்வா்கள் கைப்பேசியைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தோ்வு பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள் தோ்வு அறைக்குள் கைப்பேசியை வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மீறப்பட்டால், தொடா்புடைய தோ்வா்கள் அல்லது ஆசிரியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் எச்சரித்துள்ளாா்.

மேலும், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தோ்வா்கள் தொடா்ந்து தோ்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு, உரிய தண்டனையும் வழங்கப்படும் எனவும், ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக அல்லது ஊக்கப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு பள்ளி நிா்வாகம் செயல்படுமானால், தொடா்புடைய பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT