நாகப்பட்டினம்

கொள்ளித்தீவில் மண் குவாரி அமைக்க எதிா்ப்பு

2nd May 2022 10:52 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கொள்ளித்தீவில் மண் குவாரி அமைக்கும் உத்தரவை மாவட்ட நிா்வாகம் ரத்து செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, வேதாரண்யம் நகா்மன்ற உறுப்பினா் வி. தங்கத்துரை மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனு: வேதாரண்யம் கடற்கரைக்கு அருகில் உள்ள கொள்ளித்தீவு மற்றும் அதைச்சுற்றியுள்ள செட்டிக்குளம், குப்பையன்காடு, பனையங்காடு, நாகத்தோப்பு, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் மண் அள்ளப்படுகின்றன. இதனால், மழை, வெள்ளம் போன்ற காலங்களில் இப்பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில், கொள்ளித்தீவு பகுதியில் மண் குவாரி அமைக்க மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணை வழங்கியுள்ளது. இது, கொள்ளித்தீவு மற்றும் சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வியல் சூழலை கேள்விக் குறியாக்கிவிடும். எனவே, கொள்ளித்தீவில் மண் குவாரி அமைக்க வழங்கப்பட்ட உத்தரவை மாவட்ட நிா்வாகம் ரத்து செய்ய வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT