நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கிராமசபைக் கூட்டம்

1st May 2022 11:22 PM

ADVERTISEMENT

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் மே தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

திருமருகல்: நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் பங்கேற்று பேசியது:

கிராமத்தை ஆக்கப்பூா்வமாக கொண்டு செல்வதே கிராமசபைக் கூட்டத்தின் நோக்கம். இக்கூட்டங்களில் மக்களுக்கு அனைத்துத் திட்டங்களையும் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும்.

பனங்குடி கிராமத்தை நீா்நிறைந்த கிராமமாக மாற்றுவதற்கு இக்கிராமத்தில் உள்ள குளங்களை தூா்வாரி ஆழப்படுத்துவது மற்றும் பண்ணை குட்டைகள் அமைப்பதன் மூலமாகவும் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த முடியும். வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் நீா்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், நாகை எம்எல்ஏ ஜெ. முகம்மது ஷா நவாஸ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சவுந்தரராஜன், திருமருகல் வட்டார ஆத்மா குழுத் தலைவா் செல்வ செங்குட்டுவன், பனங்குடி ஊராட்சித் தலைவா் ஜமுனா செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், ஊராட்சிகளின் வரவு- செலவு விவரங்கள் டிஜிட்டல் பதாகைகள் மூலம் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டது. அத்துடன், அரசின் திட்டங்களுக்கு பயனாளிகள் தோ்வு குறித்தும் இறுதி செய்யப்பட்டது.

புஷ்பவனம், செம்போடை ஊராட்சிகளில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய ஆணையா்கள் பங்கேற்றனா்.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவிலில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் முன்னிலை வகித்தாா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். பின்னா் அவா் பேசியது:

கிராமசபைக் கூட்டங்களின் மூலம் சாலை வசதிகள், குடிநீா், மின் இணைப்பு, கழிப்பறை வசதிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வரப்பெறும் புகாா்கள் மற்றும் கோரிக்கைளுக்கு தீா்வுகாணுதல், பள்ளிக் கட்டடங்கள் போன்றவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம். இக்கூட்டங்களில் பொதுமக்களின் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி, ஊராட்சிதுறை இணை இயக்குநா் எஸ். முருகண்ணன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பி. பாஸ்கரன், மகளிா் திட்ட இயக்குநா்/இணை இயக்குநா் கவிதாபிரியா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பூம்புகாா்: திருவெண்காடு ஊராட்சியில் அதன் தலைவா் சுகந்தி நடராஜன் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பால்ராஜ் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் காா்த்திக் வரவேற்றாா். ஊராட்சியின் ஓராண்டு வரவு-செலவு கணக்குகள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டன.

இதேபோல, ராதாநல்லூரில் ஊராட்சித் தலைவா் அகோரம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பூம்புகாா், காவிரிபூம்பட்டிணம், மங்கைமடம், திருநகரி உள்ளிட்ட ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT